Monday, July 13, 2026

தேவதை

 


அஜிசுக்கு போன் பண்ணியும் எடுக்கல ரெண்டு நாள் ஆச்சு அப்படின்னு யோசித்துக்கொண்டே இருந்தேன். 

டெலிபதி மாதிரி கால் பண்ணான்.

"என்னடா சொக்கா 

எங்க இருக்க "?

"மதுரையா? திண்டுக்கல்லா?  ஃப்ரீயா இருக்கியா"?  இத்தனை கேள்வி கேட்டுட்டு தான் என்கிட்ட பேசுவான்.

ஏன்னா ..

நான் தமிழ்நாடு அரசு உளவுத்துறைல இன்ஸ்பெக்டரா திண்டுக்கல் வேலை பார்க்கிறதுனால .

சில சமயம் வீட்டுக்கு மதுரைக்கு வந்து இருப்பேன்.

 பெரும்பாலும் திண்டுக்கல்லதான் இருப்பேன்.

 எங்க இருந்தாலும்  போன் வந்துகிட்டே பிஸியா தான் இருக்கும்.

"டேய் அஜித் ஆபீஸ்ல தான் ப்ரீயா தான் இருக்கேன்." 

உடனே அஜிஸ் "என்னடா தேர்தல்ல இப்படி விஜய் யாருமே எதிர்பார்க்காத  ரிசல்ட்டா இருக்கு!"

"ஆமாண்டா அவனே இதை எதிர்பார்த்து இருக்க மாட்டான்" என்றேன்.

"இல்லடா சொக்கு நான் எப்பவுமே தேர்தல் டயத்துல வாக்கு என்ற அன்னைக்கு ஒரு 11 மணிக்கெல்லாம் ஒன்று ஏடிஎம்கே லீடிங்ல இருப்பாய்ங்க இல்லைன்னா டிஎம்கே லீடிங்ல இருப்பாய்ங்க 

அதுக்கப்புறம் நான் டிவியை பார்க்க மாட்டேன்"

" ஏன்னா லீடிங்ல இருக்கவன்தான் வருவான்."

"ஆனா இந்த வட்டம் என்னடா டிவி முன்னாடியே உக்கார வச்சுப்புட்டாய்ங்க. "

"அதுவும் நண்டு சிண்டுக்கு கூட மைனாரிட்டினா என்ன மெஜாரிட்டினா என்னன்னு அரசியல் புரிய வைச்சுப்புட்டாங்கப்பா..."

'சரி அத விடு நம்ம துரை பையனுக்கு யூனியன் ஆபீஸ்ல வேலைக்கு ஆடர் வந்திருச்சா?"

துரை வேறு யாரும் இல்லை எங்கள் நண்பன் தான் நாங்க எல்லாரும் 1988 மே மாசம் தமிழ்நாடு போலீஸ்ல கான்ஸ்டபிலா வேலைக்கு சேர்ந்தோம்.

 முதல் சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்ட சிப்பாய் கழகம் நடந்த வேலூரில்தான் ட்ரெயினிங் முடிச்சோம். 

நம்ம மக்கள் தான் வரலாறு மறந்தவங்கதானே !

இதைச் சொல்வதை விட்டுவிட்டு வேலூருக்கு அடையாளமா மரங்கள் இல்லாத மலை; சாமி இல்லாத கோயில்; கொங்கை இல்லா மங்கைன்றாங்கப்பா

போலீஸ் ட்ரைனிங் முடித்து மதுரை அர்பன் ஆயுதப்படைல டூட்டிக்கு சேர்ந்தோம். 

இங்க வந்ததுக்கு அப்புறம் தான் நாங்க மூணு பேரும் நண்பர்கள் ஆனோம். 

முதல்ல எனக்கு திருமணம் ஆச்சு .

அதுக்கப்புறம் துரைக்கு திருமணம் ஆச்சு 

அஜீஸுக்கு கொஞ்சம் லேட்டா தான் திருமணம் ஆச்சு. 

எனக்கு ஒரு பெண் பிள்ளை ஒரு ஆண் பிள்ளை பொம்பள பிள்ளையை கட்டிக் கொடுத்தாச்சு ஆம்பள பையன் வெப் டிசைனர் பிளஸ் இயற்கை விவசாயம் பண்றான்.

அதே மாதிரி அஜீஸ்க்கு ஒரே பையன் அவன் டாக்டருக்கு படிச்சு தென்காசியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை செய்றான். 

துரைக்கு மூத்தது பையன் இரண்டாவது பொண்ணு ரெண்டு குழந்தைகளும் லேட்டா தான் பிறந்தது. 

பையன் டிகிரி முடிச்சு இருக்கான் ஆனா அவனால வேலை எதுவும் தேடி போக முடியல. 

துரைதான் யாரோ டிஎம்கே கட்சில சொந்தக்காரர் இருக்காரு யூனியன் ஆபீஸ்ல கிளார்க் வேலை வாங்கி தர்றதா சொன்னாரு அப்படின்னு அஞ்சு லட்ச ரூபாயை ஒரு நாலு வருஷத்துக்கு முன்னாடி குடுத்து இதுவரைக்கும் வேலை வரல. 

நானும் அஜிஸும் துரை கிட்ட வேலைக்கு பணம் எல்லாம் கொடுக்காத அதெல்லாம் டிஎன்பிஎஸ்சி மூலம் தான் இப்ப எடுக்குறாங்க ஏமாறாதே அப்படின்னு சொல்லியும் கேட்க மாட்டேனுட்டான்.

அந்த வேலையை பத்தி தான் இப்ப அஜிஸ் என்கிட்ட கேட்கிறான்.

"அஜிஸ் நான் அவன்கிட்ட பணத்தை வாங்குடா அப்படின்னுபல முறை சொல்லியும் கேட்கல. "

ஒவ்வொரு தடவையும் "கையெழுத்து எல்லாம்  போட்டாரு சிஎம் நலத்திட்ட உதவிகள் மதுரைக்கு வரும்போது குடுக்கிறதா சொல்லி இருக்காங்க" அப்படின்னு ஒவ்வொரு தடவையும் ஒவ்வொன்னா சொல்லுவான்.

கடைசியாக கேட்டப்ப கூட "பைல் எல்லாம் ரெடி ஆயிடுச்சு ஆட்சி முடிஞ்சாலும் எந்த ஆட்சி வந்தாலும் அதை ஒன்னும் செய்ய முடியாது" அப்படின்னு சொன்னான்டா! 

இன்னும் வேலைக்கான ஆர்டர் எதுவும் வரல "அது எப்படி வரும் நமக்கு தெரியாதா?"

"போலீஸில் இருந்துகிட்டு இத்தனை வருஷம் சர்வீஸ் பண்ணிட்டு ரிட்டயர் ஆகுற நேரத்துலயும் இப்படி கேனையா இருக்கானேடா!

 என்ன பண்ண சொல்ற?" என்றேன் நான். 

"அப்ப அஞ்சு லட்சம் போச்சா" என்றான் அஜிஸ்.

"அஞ்சு லட்சமா எட்டு லட்சம் டா?"

"என்னடா சொல்ற!!"

"ஆமாண்டா திரும்ப மூணு லட்சம் கொடுத்தான்டா அப்பயும் நான் சொன்னேன் கொடுக்காதடா ன்னு ? கேட்டா தானே "

"அடப்பாவி!' "என்னடா சொக்கு

ஏ ஆர் இல் இருந்தப்ப ஏமாந்த மாதிரி இன்னுமாடா இருக்கான்? "

ஆர்ம்டு ரிசர்வ் என்பதன் சுருக்கம் தான் ஏ ஆர். 

"அப்ப என்னடா ஏமாந்தான்னு" அஜிசை கேட்க 

"ஏன்டா அவன் ஏமாந்தது ஏ ஆர் புல்லா தெரியும் உனக்கு தெரியாதா? "

"இல்லடா மறந்துட்டேன். "

அஜீஸ் சொல்ல ஆரம்பித்தான்.

துரை கல்யாணம் ஆன புதுசு  புது மாப்பிள்ளைக்கான கழுத்துல செயின் கையில் பிரேஸ்லெட் விரல்ல மோதிரம்ன்னு போட்டிருந்தப்ப ஒரு நாள் டூட்டி முடிச்சு பெரியார் பஸ் ஸ்டாண்டுக்கு போயி சோழவந்தான் போவதற்காக அங்க நின்று இருக்கான்.

அப்ப ஒரு மூணு பேரு இவன் பக்கத்துல நின்னு ஒருத்தன் வைர வியாபாரி என்று சொல்லிகிட்டு இங்க நகை கடை பஜார்ல வைரங்கள கொடுத்துட்டு பணத்தை வாங்கிட்டு ராமேஸ்வரம் போய் சிலோனுக்கு போனோம்னு வந்ததாகவும்

 ஆனால் ,அந்த தெரிந்த கடைக்காரர் கடையை பூட்டிட்டு போயிட்டதாகவும் இப்ப அவசரமா சிலோனுக்கு போறதுனால வைரங்கள கிடைச்ச விலைக்கு கொடுத்துட்டு போகலாம்னு பேசிகிட்டு இருக்காதா இவன் காதுக்கு கேட்கும்படி சொல்ல ...

அவர்கள் எதிர்பார்த்தது போல இவன் அவர்கள் வலையில் விழ 

"எங்க காமிங்க அப்படின்னு" இவன் பார்க்க 

அந்த பங்குனி  வெளிச்சத்துல சிவப்பு பச்சை வெள்ளைன்னு மினு மினுன்னு டால் அடிக்குது .

இன்னொருத்தன் 

"நான் தங்க நகை ஆசாரி தான் இது வைரம் தான் நல்ல விலைக்கு போகும்.

 ஆனா , என்கிட்ட காசு எதுவும் இல்லை இல்லாட்டி நான் வாங்கி வித்து நல்ல காசு பார்த்துவிடுவேன். "

இன்னொருத்தன் "சார் நீங்க வாங்குங்க நான் உங்களுக்கு எப்படியும் வித்து தரேன் எனக்கு கொஞ்சம் கமிஷன் கொடுத்தா போதும் " என்று சொல்ல. 

நம்ம துரை என்கிட்ட நூறு ரூபா தான் இருக்கு அப்படின்னு சொல்ல..

அந்த வைரத்தை வைத்திருந்தவன் "

உங்க கழுத்துல இருக்குற செயின், பிரேஸ்லெட், மோதிரத்தை மட்டும் குடுங்க இது அவ்வளவையும் வச்சுக்கோங்க இது லட்ச கணக்கில் போகும்"

 அப்படின்னு சொல்லவும் 

இவன் பேராசைப்பட்டு எல்லாத்தையும் கழட்டி கொடுத்துட்டு அந்த வைரங்கள வாங்கி பேண்ட் பாக்கெட்ல ரொம்ப பத்திரமா போட்டுக்கிட்டு சோழவந்தானுக்கு கிளம்ப

அப்ப அந்த வைரத்தை வித்து தரேன்னு சொன்னவன் "நீங்க என்ன வேலை பாக்குறீங்க? அப்படின்னு கேட்க போலீசுன்னு சொல்லவும் உடனே சுதாரிச்சுக்கிட்டு "நாளைக்கு சாயந்திரம் அஞ்சு மணிக்கு இதே இடத்துக்கு வாங்க நான் உங்களுக்கு வித்து தரேன்" என்று சொல்லிவிட்டு அந்த மூன்று பேரும் எங்க போனாங்கன்னே தெரியல.

இவன் நம்ம தெளிவா பேசி குறைந்த விலையில் வைரங்களை வாங்கிட்டோம்னு பகுமானமா சோழவந்தானுக்கு பஸ் ஏறி போனான்

புது கல்யாணம் இல்ல இவன் பொண்டாட்டி வீட்டுக்கும் வாசலுக்கு வந்து எட்டி பார்த்து இவனை எதிர்பார்த்து காத்து இருந்திருக்காங்க. 

என்னடா எப்பவும் சீக்கிரம் வந்துருவாரு ..

இன்னைக்கு ஏன் இவ்வளவு லேட்டு அப்படின்னு நினைச்சுக்கிட்டே இருக்க ...

இவன் தெருவுல நடந்து வர்றது தெரிஞ்சது. 

அப்ப இவன் பொண்டாட்டி என்னடா விரல்ல மோதிரம் கையில பிரேஸ்லெட் கழுத்துல செயின காணோமேன்னு தூரத்திலேயே பாத்துட்டு 

வீட்டு வாசப்படி ஏறவும்

"என்னங்க செயின், மோதிரம், பிரேஸ்லெட் எதையும் காணோம்" அப்படின்னு பதட்டத்தோட கேட்டுருக்காங்க. 

"பேசாம நீ வீட்டுக்குள்ள வா அதிர்ஷ்ட தேவதை நம்ம வீட்டுக்கு வந்து இருக்கா உள்ள வா சொல்றேன்."

"இனி எல்லாம் நமக்கு யோகம்தான்".

"என்னங்க சொல்றீங்க..."

வீட்டுக்குள்ள வந்து பேண்ட் பாக்கெட்ல இருந்து அவங்க கொடுத்த வைரங்களை பத்திரமாக எடுத்து காண்பித்து இருக்கான். 

அவன் பொண்டாட்டி அதைப் பார்த்த மாத்திரத்திலேயே 

"ஏங்க சும்மா விளையாடாதீங்க ..

சும்மா தானே சொல்றீங்க.

நகைங்க எங்க?" என்று மறுபடியும் கேட்க. 

இவன் நடந்ததைச் சொல்ல. 

"ஏங்க உங்களுக்கு கொஞ்சமாவது இருக்காங்க  பார்த்தாலே தெரியுது இது வைரம்  இல்லைன்னு."

"எனக்கு அதெல்லாம் தெரியாது இப்பவே எனக்கு நகைங்க எல்லாம் வந்து சேரணும்" என்று விரட்ட 

இவன் ராவோட ராவா திடீர் நகர் போலீஸ் ஸ்டேஷன் வந்து புகார் கொடுக்க .

அப்ப இருந்த டிஎஸ்பி "

ஏன்யா போலீஸ்காரனா இருந்துகிட்டு மானத்தை வாங்குற"

 அப்படின்னு கண்டமேனிக்கு திட்டி புகாரை பெற்று வேற ஏதோ கேசுல புடிச்சத இவனுக்கு ரெண்டு பவுனா மூணு பவுனா கொடுத்தாங்கன்னு .

அஜிஸ் சொன்னதைக் கேட்டதும்

 புகார் கொடுத்தது மட்டும் லேசாக எனக்கு ஞாபகம் வந்த மாதிரி இருந்தது.

2 comments:

  1. தொடர்ந்து ஏமாற்றுவது சிலருக்கு கைவந்த கலை தொடர்ந்து ஏமாறுவதும் கூட சிலருக்கு விதி விரிக்கும் வலை..

    ReplyDelete

ரிசர்வ்லைன்

 ரிசர்வ் லைன்  யூடியூபில் தற்செயலாக அமெரிக்க ஹார்வேர்ட் யுனிவர்சிட்டி சென்று தாவைகாவில் களப்பணி ஆற்றம் அஸ்விதா உடன் தினத்தந்தி சேனலில் நேர்...